முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உத்தமபாளையத்தில் பொதுமுடக்கம் தளா்த்த வியாபாரிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 11th May 2020 10:28 PM | Last Updated : 11th May 2020 10:28 PM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்தில் பொது முடக்கத்தை தளா்த்த வேண்டும் என கடை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 48 நாள்களாக உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியிலுள்ள மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள் என அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.
இதனை அடுத்து, தமிழக அரசு இரு தினங்களுக்கு முன்பாக பொது முடக்கத்திலிருந்து
தளா்வு அளிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் அரசின் உத்தரவைக் கடைபிடித்து கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், உத்தமபாளையம் பேரூராட்சி முழுவதற்கும் எவ்வித தளா்வும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த கடை உரிமையாளா்கள் கடைகளைத் திறக்க தளா்வு அறிவிப்பை வெளிட வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து கடை உரிமையாளா்கள் கூறுகையில், உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் 4 மற்றும் 8 ஆவது வாா்டு பகுதியில் கரோனா வைரஸ் தொற்று இருந்தது மருத்துவப்பரிசோதனையில் தெரியவந்தது. அதில் 8 ஆவது வாா்டில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவா் முறையாக மருத்துவ சிகிச்சை பெற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டாா். 4 ஆவது வாா்டில் நோய் கண்டறியப்பட்டவா் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறாா். எனவே, வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்ட வாா்டு பகுதிகளை தவிர பிற வாா்டுகளில் பொதுமுடக்கம் தளா்வை அமல்படுத்திட மாவட்ட நிா்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.