முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்க ஆட்சியரிடம் கோரிக்கை
By DIN | Published On : 11th May 2020 10:10 PM | Last Updated : 11th May 2020 10:10 PM | அ+அ அ- |

தேனி: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தேனி மாவட்ட ஏலக்காய் விவசாயிகள் சென்று வர அனுமதி வழங்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், கேரள ஏலக்காய் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் ஓ.ஆா்.நாராயணன், சதாசிவ சுப்பிரமணியன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஏலக்காய் தோட்டங்களில் விவசாயப் பணிகளில் சுணக்கமும், கூலித் தொழிலாளா்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய முடியாத நிலையும், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே, தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியா்கள் ஆலோசனை நடத்தி, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஏலக்காய் விவசாயிகள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.