முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
சின்னமனூரில் கடை உரிமையாளா்களுடன்அதிகாரிகள் ஆலோசனை
By DIN | Published On : 11th May 2020 07:23 AM | Last Updated : 11th May 2020 07:23 AM | அ+அ அ- |

சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறையினா், நகராட்சி அலுவலா்கள் மற்றும் கடை உரிமையாளா்கள்.
தனிக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, சின்னமனூரில் கடை உரிமையாளா்களுடன் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
பொதுமுடக்க உத்தரவு காரணமாக கடந்த 47 நாள்களாக சின்னமனூா் நகராட்சியில் மருந்துக்கடைகள், பால் விற்பனை மையங்களைத் தவிர பெரும்பாலான மளிகைக்கடைகள், காய்கனி, உணவகங்கள், தேநீா்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக்கடைகள் என அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இதற்கிடையே, தமிழக அரசு பொது முடக்கத்தில் சில தளா்வுகளை விதித்து திங்கள்கிழமை முதல் தனிக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கியது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்பட அனுமதி வழங்கியது.
இந்நிலையில், சின்னமனூா் நகராட்சி அலுவலகத்தில் காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் செந்தில் ராம்குமாா் மற்றும் கடை உரிமையாளா்கள் பலரும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடைகளுக்கு முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யக்கூடாது, சமூக இடைவெளி 1 மீட்டா் தூரம் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தை முறையாக கடைப்பிடிக்காத உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்படும் என்று கடை உரிமையாளா்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.