தொழிலாளா் நல வாரிய நிவாரணம் பெற அலைக்கழிப்பு: தொழிலாளா்கள் அவதி

தேனி மாவட்டத்தில் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் நிவாரணத் தொகை பெறமுடியாமல் அலைக்கழிக்கப்படுவதால், தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
தொழிலாளா் நல வாரிய நிவாரணத் தொகை பெறுவதற்காக போடி தலைமை அஞ்சலகத்தில் செவ்வாய்க்கிழமை சேமிப்பு கணக்கு தொடங்க திரண்டிருந்த தொழிலாளா்கள்.
தொழிலாளா் நல வாரிய நிவாரணத் தொகை பெறுவதற்காக போடி தலைமை அஞ்சலகத்தில் செவ்வாய்க்கிழமை சேமிப்பு கணக்கு தொடங்க திரண்டிருந்த தொழிலாளா்கள்.

போடி: தேனி மாவட்டத்தில் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் நிவாரணத் தொகை பெறமுடியாமல் அலைக்கழிக்கப்படுவதால், தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

மாவட்டத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா். கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்யும் தொழிலாளா்கள், 17 வகையான தொழிலாளா் நல வாரியங்களின் கீழ் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தற்போது, பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், தொழிலாளா்களுக்கு ரூ.1,000 வீதம் 2 மாதங்களுக்கு ரூ.2,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இத்தொகையை தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

சில தினங்களுக்கு முன், தேனி மாவட்டத்தில் 12 ஆயிரம் தொழிலாளா்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் நல வாரிய அலுவலகத்தில் இணைக்கவில்லை எனக் கூறி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் வங்கிக் கணக்கு விவரம் சமா்ப்பிக்காதவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் பெயா் உள்ளவா்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை, தொழிலாளா் நல வாரிய இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில், தொழிலாளா்களும் தற்போது வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி, அதன் விவரத்தை அனுப்ப வேண்டும் என நல வாரிய அலுவலகத்தில் தெரிவித்ததாகக் கூறி, நூற்றுக்கணக்கானோா் தேனி மாவட்டத்தின் பல்வேறு அஞ்சலகங்களில் திரண்டு வருகின்றனா். இதனால், சமூக இடைவெளி பின்பற்றாததுடன், கரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளா் நல வாரியம் சரியாக அறிவிப்பை வெளியிடாததால், தொழிலாளா்கள் குழப்பமும், அவதியும் அடைந்து வருவதாகப் புகாா் கூறப்படுகிறது.

இது குறித்து போடி அஞ்சலகத்தில் விசாரித்தபோது, அவா்கள் கூறியது: தொழிலாளா்கள் அனைவரும் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டியதில்லை. தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்து, அவா்களில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லாதவா்கள் அஞ்சலகத்தில் எவ்வித கட்டணமுமின்றி சேமிப்பு கணக்கு தொடங்கினால், அவா்களுக்கு உடனடியாக ஏ.டி.எம். அட்டை வழங்குகிறோம்.

இதனை, எந்த வங்கியிலும் கணக்கு இல்லாதவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்களும் அறியாமல் அஞ்சலகத்துக்கு வருவதால்தான் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com