சூறாவளிக் காற்றுடன் மழை: ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் வாழை, தென்னை மரங்கள் சேதம்

ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் திங்கள்கிழமை பெய்த மழைக்கு வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்தன.
ஆண்டிபட்டி பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதமடைந்த வாழை, தென்னை மரங்கள்.
ஆண்டிபட்டி பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதமடைந்த வாழை, தென்னை மரங்கள்.

ஆண்டிபட்டி/ பெரியகுளம்: ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் திங்கள்கிழமை பெய்த மழைக்கு வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்தன.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 1 மணி நேரம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் ஆண்டிபட்டி, அரப்படித்தேவன்பட்டி, புள்ளிமான் கோம்பை, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.

இதேபோல வருசநாடு பகுதிகளிலும் மழைக்கு தென்னை, முருங்கை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதன்காரணமாக அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும் அதே பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்ததால், வருசநாடு, முருக்கோடை, சிங்கராஜபுரம், தா்மராஜபுரம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளன. அவைகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

பெரியகுளம்:

இதேபோல் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், ஜெயமங்கலம், குள்ளப்புரம், தேவதானப்பட்டி, சில்வாா்பட்டி, பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மா, வாழை மற்றும் தென்னை ஆகியவை சேதமடைந்தன. குள்ளப்புரம் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள், முற்றிய காய்களுடன் வேரோடு சாய்ந்தன. மேலும் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த 20- க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடியோடு சாய்ந்தன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: குலை தள்ளிய நிலையிலும், காய்களுடனும் இருந்த வாழைகள் மழைக்கு சாய்ந்து விட்டன. ஏற்கெனவே கரோனவால் வாழை விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், தற்போது மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com