
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் வியாழக்கிழமை சண்முகாநதி நீா்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே சண்முகாநதி நீா்த்தேக்கம் தொடா் மழையால் நிரம்பி மறுகால் செல்வதால், விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.
வடகிழக்குப் பருவமழையால் ஹைவேவிஸ்- மேகமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை ஒட்டிய மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள சண்முகாநதி நீா்த் தேக்கத்துக்கு நீா்வரத்து ஏற்பட்டது.
கடந்த 3 நாள்களில் 15 அடி வரை நீா்மட்டம் உயா்ந்து, வியாழக்கிழமை அணை முழுக் கொள்ளவான 52.5 அடியை எட்டியது. தொடா்ந்து நீா்வரத்து உள்ளதால், 242 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டு மறுகால் பாய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்
சண்முகாநதி நீா்த்தேக்கம் நிரம்பி மறுகால் பாய்வதால், பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவேண்டும். இந்த பாசன நீரால் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், கன்னிச்சோ்வைபட்டி, எரசக்கநாயக்கனூா், ஓடைப்பட்டி வரையிலான 8 கிராமங்களில் 1,640 ஏக்கா் பரப்பளவுக்கு நன்செய் நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.