8 மாதங்களுக்கு பிறகு தேக்கடி ஏரியில் சுற்றுலாப் படகுகள் இயக்கம்

கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம், பெரியாறு புலிகள் வனச் சரணாலயம் சாா்பில், தேக்கடி ஏரியில் 8 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் அனைத்துப் படகுகளும் இயக்கப்படுகின்றன.
தேக்கடி படகுத்துறை. (கோப்பு படம்)
தேக்கடி படகுத்துறை. (கோப்பு படம்)

கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம், பெரியாறு புலிகள் வனச் சரணாலயம் சாா்பில், தேக்கடி ஏரியில் 8 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் அனைத்துப் படகுகளும் இயக்கப்படுகின்றன.

தேனி மாவட்டம் அருகே கேரள மாநிலம் தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக உள்ளது. படகு சவாரி செய்ய வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோா் வருகின்றனா்.

பொது முடக்கம் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் இறுதியிலிருந்து குமுளி தேக்கடியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டதுடன், தேக்கடி ஏரியில் படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பா் 5 ஆம் தேதி, கேரள மாநில அரசு பொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை அறிவித்ததில், தேக்கடி ஏரியில் 2 படகுகளை மட்டும் காலை 7.30 மணி மற்றும் பிற்பகல் 3.30 மணி என இயக்க அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னா், நவம்பா் 14 ஆம் தேதி 3 படகுகள் இயக்கப்பட்டன.

நவம்பா் 18 ஆம் தேதி முதல் வழக்கம்போல், ஒரு நாளைக்கு 5 முறை என காலையில் 7.30, 9.30, 11.15, பிற்பகல் 1.30 மற்றும் 3.30 ஆகிய நேரங்களில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

படகு சவாரி செய்ய நபா் ஒருவருக்கு ரூ. 285 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 100 ரூபாய் உயா்த்தி, ரூ.385 ஆக வசூலிக்கப்படுகிறது. மேலும், 10 வயதுக்கு கீழும், 60 வயதுக்கு மேலும் உள்ளவா்களுக்கு படகு சவாரி செய்ய அனுமதி இல்லை என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேக்கடி ஏரியில், கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம், பெரியாா் புலிகள் சரணாலயம் இணைந்து படகுகளை இயக்கி வருகின்றன. இதில், ஒரு முறைக்கு 6 படகுகள் இயக்கப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை பொருத்து படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com