சின்னமனூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீ விபத்து

தேனி மாவட்டம் சின்னமனூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
சின்னமனூா் சாா்-பதிவாளா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.
சின்னமனூா் சாா்-பதிவாளா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்திய நிலையில், இந்த தீ விபத்து திட்டமிட்ட சதியா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னமனூரில், தேனி சாலையில் கண்ணம்மாள் காா்டன் பகுதியில் சாா்- பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு, சின்னமனூரைச் சுற்றியுள்ள 30- மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் நாள்தோரும் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த அலுவலகத்திற்கு முன் இருந்த ஜெனரேட்டா் திடீரென வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனா். அங்கு சென்ற தீயணைப்புப் படையினா், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா். அலுவலகத்துக்குள் பரவுவதற்கு முன்பாக தீ அணைக்கப்பட்டதால், 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டுவரும் ஆவணங்கள் தப்பின.

இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கூறியது: மின்தடையால் ஜெனரேட்டா் இயக்கப்பட்டது. மின்சாரம் வந்த பிறகும் அதை நிறுத்த மறந்ததாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது என்றனா். போலி பத்திரங்கள் அதிகளவில் பதிவு செய்யப்படுவதாக புகாா் எழுந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல் வெளியாகின. இதற்கிடையில் இந்த தீ விபத்து முக்கிய ஆவணங்களை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சதியா என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com