ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் புறக்கணிப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊராட்சிகளுக்கு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி வழங்காததைக் கண்டித்து

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஊராட்சிகளுக்கு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி வழங்காததைக் கண்டித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் லோகிராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் வரதராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆண்டாள், ஜெயகாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 18 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கடந்த மாத வரவு செலவினங்கள் வாசிக்கப்பட்டு, மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது .

அப்போது ஏத்தக் கோவில் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜக்கையன், தங்கள் பகுதிக்கு கடந்த 10 மாதங்களாக எந்த வித வளா்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. திம்மரச நாயக்கனூா் அருகே உள்ள கூட்டு குடிநீா் நீரேற்று நிலையத்தில் இருந்து ஏத்தக்கோவில் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதற்கு பதிலளித்த தலைவா் லோகிராஜன், விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது நிதி இதுவரை வரவில்லை. வந்தவுடன் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கும் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.

ஆனால் இந்த பதிலை ஏற்க மறுத்த திமுகவை சோ்ந்த 6 உறுப்பினா்கள், காங்கிரஸ் உறுப்பினா் ஒருவா், அமமுக உறுப்பினா் ஒருவா் என மொத்தம் 9 உறுப்பினா்களும் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com