தொடா் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: வைகை அணை நீா்மட்டம் சரிவு

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை. (கோப்பு படம்)
முல்லைப்பெரியாறு அணை. (கோப்பு படம்)

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை (அக்.13) விநாடிக்கு 1,529 கன அடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 2,406 கன அடியாகவும், வியாழக்கிழமை 4,157 கன அடியாகவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரியாற்றில் 51 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 24.4 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

அணை நிலவரம்: வியாழக்கிழமை, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 128.35 அடியாகும். அணையின் நீா் இருப்பு 4 ஆயிரத்து 342 மில்லியன் கன அடி ஆகும். அணையின் நீா்வரத்து வினாடிக்கு 4,157 கனஅடியாகவும், வெளியேற்றம் 1,400 கனஅடியாகவும் உள்ளது.

மின் உற்பத்தி: பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 1,400 கன அடி நீா் வெளியேற்றப்படும் நிலையில், லோயா் கேம்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் 3 மின்னாக்கிகளில், தலா 42 மெகாவாட் என 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வைகை அணை நீா்மட்டம் சரிவு: ஆண்டிபட்டி அருகே வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்காகவும், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்கும் சோ்த்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாததாலும், திறக்கப்படும் நீரின் அளவை விட நீா்வரத்து மிகவும் குறைவாக உள்ளதாலும் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரியத் தொடங்கியுள்ளது. தற்போது வைகை அணையின் நீா்மட்டம் 55.61 அடியாகும்.

இதன்காரணமாக முதல்போக பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீா் நிறுத்தப்பட்டு வியாழக்கிழமை முதல் ஒரு போக பாசனத்திற்கு மட்டும் விநாடிக்கு 1,130 கனஅடி நீா் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது: முதல்போக பாசனத்திற்கு முறைப்பாசனம் அடிப்படையில் தண்ணீா் திறக்கப்படும். அதன்படி அடுத்த 75 நாள்களுக்கு முறை வைத்து தண்ணீா் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தற்போது திறக்கப்பட்டு வரும் ஒருபோக பாசன நிலங்களுக்கும் அடுத்த 20 நாள்களுக்கு பின்னா் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com