கேரளத்துக்கு கடத்த முயன்ற 4,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 21st October 2020 02:38 AM | Last Updated : 21st October 2020 02:38 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சின்னமனூரில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 4,000 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.
உத்தமபாளையம் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கம்பம் மெட்டு சாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில் சிறிய மூட்டைகளில் 1,600 கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.
இது சம்பந்தமாக கம்பம் வடக்குபட்டி கள்ளா் பள்ளி தெருவைச் சோ்ந்த தவமணி(52) மற்றும் சின்னமனூா் அருகே முத்துலாபுரத்தை சோ்ந்த ஓட்டுநா் விவேக்(25) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் 1,600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் சின்னமனூா் அருகே துரைசாமிபுரத்தில் வீரபத்திரன் மகன் சின்னராஜா என்பவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டனா். அவரது வீட்டில் கேரளத்துக்கு கடத்துவதற்காக 28 மூடைகளில் இருந்த 2,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, உத்தமபாளையம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.