துபையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட்: கம்பத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்வு

துபையில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கம்பத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிவக்குமார்.
சிவக்குமார்.

துபையில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கம்பத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் மட்டுமே பங்கேற்கும் டி.பி.எல். போட்டி துபையில் நடக்க உள்ளது. இதில் கம்பத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் தேர்வாகியுள்ளார். தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்தவர் சுருளிவேல். இவரது மகன் சிவக்குமார்(32), மாற்றுத் திறனாளியான இவர் துபையில் நடக்கும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகள் விளையாட உள்ளன. இது முதல் வருடம் என்பதால் அந்தந்த மாநில வீரர்கள் அவர்களது அணிக்காக விளையாட உள்ளனர். இந்த அணிகளுக்கான வீரர்களை திவ்யாங் என்ற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்தது.  தமிழக அணி சார்பில் விளையாட உள்ள சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு 11 பேர்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சிவக்குமாரும் ஒருவர். சிவகுமாருக்கு சிறுவயதிலேயே போலியோ தாக்கி இடது கால் பாதிப்படைந்த மாற்றுதிறனாளியாவார்.  சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஈர்ப்பில் இருந்த இவர், எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் ஆர்வத்துடன் சென்று வருவது மட்டுமல்லாமல், மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். 

இவரின் திறமையை அறிந்த ஏல விவசாய ஐக்கிய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஆசிக், எம்.டி.சி. கிரிக்கெட் கிளப் பயிற்சியாளர் சந்திரன், பெங்களூரைச் சேர்ந்த காதர் ஆகியோர் முறையான பயிற்சி அளித்து இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க வைத்தனர். கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்டம் தப்புக்குண்டு அருகே உள்ள  தமிழ்நாடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்தியா, இலங்கை அணிக்காக நடைபெறவிருந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

கரோனா நடவடிக்கையின் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது துபையில் நடைபெறவுள்ளது. இந்த டி.பி.எல் போட்டியில் பங்கேற்க சிவக்குமார் தேர்வாகியுள்ளார். அதே நேரத்தில் ஏழையான இவர் விளையாட்டு உபகரணங்கள், பயணச்செலவுக்கு போதிய நிதி இல்லாததால் வேதனையடைந்துள்ளார். இவரின் திறமையும் மென்மேலும் வழிபட தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்களின் உதவியை எதிர்பார்க்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com