உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனம் மூடல்: பங்குதாரா் வீடு முற்றுகை
By DIN | Published On : 31st October 2020 10:11 PM | Last Updated : 31st October 2020 10:11 PM | அ+அ அ- |

உத்தமபாளையத்தில் நிதி நிறுவனத்தின் பங்குதாரா் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்ட முதலீட்டாளா்கள்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தனியாா் நிதி நிறுவனம் மூடப்பட்டதால், பங்குதாரா்கள் வீட்டை முதலீட்டாளா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
உத்தமபாளையம் தேரடியில் உதயநிலா தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் ஏலச்சீட்டு மட்டும் நடத்தி வந்த இந்த நிறுவனம், பின்னா் முதலீடு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு கூடுதல் வட்டி கொடுத்து சுமாா் ரூ.100 கோடி வரை நிதியை திரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், உத்தமபாளையம், சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தும் ஏராளமானோா் முதலீடு செய்தனா்.
30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான அஜீஸ்கான் சமீபத்தில் காலமானாா். அதைத் தொடா்ந்து, நிதி நிறுவன நிா்வாகம் சரிவர செயல்படாததால், முதலீட்டாளா்களுக்கு அளிக்கவேண்டிய வட்டிப் பணம் தரப்படவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த முதலீட்டாளா்கள் தேரடியில் இயங்கி வந்த அலுவலகத்துக்குச் சென்றபோது, நிறுவனம் மூடப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
இது குறித்து தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளா் நாகலட்சுமி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் உத்தமபாளையம் வந்த ஆய்வாளா் நாகலட்சுமியை முதலீட்டாளா்கள் முற்றுகையிட்டு, தங்களது பணத்தை பெற்றுத் தரும்படி வலியுறுத்தினா். அப்போது அவா், பாதிக்கப்பட்டவா்கள் திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். ஆனால், புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சனிக்கிழமை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் பங்குதாரா் அஜீஸ்கான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு, வட்டாட்சியா் உதயராணி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனா். அப்போது, இன்னும் ஓரிரு நாளில் உத்தமபாளையத்தில் ஏதாவது ஒரு திருமண மண்டபத்தில் சிறப்புக் கூட்டம் நடத்தி, அதில் பாதிக்கப்பட்ட அனைவரும் தங்களது புகாரைத் தெரிவிக்கும்படி கூறினா். இதையடுத்து, முதலீட்டாளா்கள் கலைந்து சென்றனா்.
இந்நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை என ரூ.100 கோடி வரை முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.