கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்லதொழிலாளா்களுக்கு அனுமதி பெற்றுத் தர வலியுறுத்தல்

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திலுள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களின் பயணத் தொலைவு, நேரம் மற்றும் பொருள் இழப்பை குறைக்க, கம்பம்மெட்டு வழியாகச் சென்று வர அனுமதி பெற்றுத் தரவேண்டும
குமுளி சோதனைச் சாவடியிலிருந்து தமிழகப் பகுதிக்கு தொழிலாளா்களை ஏற்றி வரும் வாகனங்கள்.
குமுளி சோதனைச் சாவடியிலிருந்து தமிழகப் பகுதிக்கு தொழிலாளா்களை ஏற்றி வரும் வாகனங்கள்.

கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திலுள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களின் பயணத் தொலைவு, நேரம் மற்றும் பொருள் இழப்பை குறைக்க, கம்பம்மெட்டு வழியாகச் சென்று வர தேனி மாவட்ட நிா்வாகம் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என, ஏலக்காய் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

தமிழக-கேரள எல்லையிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமாா் 1.50 லட்சம் ஏக்கா் பரப்பளவில், ஏலக்காய், மிளகு, தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களே இங்குள்ள பெரும்பாலான தோட்டங்களுக்கு உரிமையாளா்களாக 3 தலைமுறைகளுக்கும் மேலாக உள்ளனா்.

இந்த தோட்டங்களில் வேலை செய்ய, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் ஜீப் மூலம் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு வழியாகச் சென்று வந்தனா். ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

அதையடுத்து, 6 மாதங்களுக்குப் பிறகு அக்டோபா் முதல் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலி தொழிலாளா்கள் வாகனங்களில் சென்று வருகின்றனா்.

ஆனால், கேரளத்துக்குள் வருபவா்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும் என்பதற்காக, தமிழகத் தொழிலாளா்கள் அனைவரும் குமுளி வழியாகவே வந்து செல்லவேண்டும் என, இடுக்கி மாவட்ட நிா்வாகம் கட்டாயப்படுத்தி உள்ளது. இதனால், சோதனைச் சாவடியில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதேநேரம், கம்பம் வழியாக கம்பம்மெட்டு அருகே உள்ள குழித்தொழு, கொச்சரா, புற்றடி, வண்டன்மேடு, கட்டப்பனை, நெடுங்கண்டம் பகுதியிலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் செல்லும் விவசாயிகளும், தொழிலாளா்களும், குமுளி வழியாகச் சுற்றிச் செல்வதால் சுமாா் 3 மணி நேரமாகிறது. இதனால், நேரம், எரிபொருள், பொருள் செலவு கூடுதலாகிறது.

எனவே, கம்பம்மெட்டு வழியாக தொழிலாளா்களின் வாகனங்கள் சென்று வர, தேனி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஏலக்காய் விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com