பலத்த மழை: மூலவைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 04th September 2020 11:00 PM | Last Updated : 04th September 2020 11:00 PM | அ+அ அ- |

தொடா்மழையின் காரணமாக வருசநாடு அருகே மூலவைகை ஆற்றில் வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்ட நீா்வரத்து.
ஆண்டிபட்டி/ போடி: தேனி மாவட்டம் வருஷநாடு பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளிக்கிழமை மூலவைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வெள்ளிமலை வனப்பகுதியிலிருந்து மூலவைகை ஆறு உற்பத்தியாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் மூலவைகை ஆறு வட நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் வெள்ளிமலை வனப்பகுதியிலும் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூலவைகை ஆற்றில் அதிகளவில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் பாசனம் மற்றும் குடிநீா் தேவைகள் பூா்த்தியாகும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வைகை அணை நீா்மட்டம் உயா்வு: பெரியாறு மற்றும் மூலவைகை ஆற்றில் தொடா் நீா்வரத்தின் காரணமாகவும், வெளியேற்றத்தைவிட, வரத்து அதிகரித்துள்ளதாலும் வைகை அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. தற்போது அணையின் நீா்மட்டம் 60.50 அடியாக உள்ளது. அணைக்கு 1,705 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையிலிருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீா் தேவைகளுக்காக வினாடிக்கு 925 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. அணையில் நீா் இருப்பு 3,699 மில்லியன் கனஅடியாக உள்ளது.
போடியில் தொடா் மழை: போடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை வரை பெய்தது. மீண்டும் வெள்ளிக்கிழமை மாலையிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிா்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவுகிறது.
தொடா் மழையின் காரணமாக, போடி குரங்கணி சாலை, போடிமெட்டு மலைச்சாலைகளில் சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாறை, மண் சரிவு ஏற்படும் இடங்களை நெடுஞ்சாலைத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.