குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைப் பாதையை திறக்கக்கோரி செப்.22-இல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைப் பாதையை திறக்க வலியுறுத்தி, செப்.22-இல் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைப் பாதையை திறக்க வலியுறுத்தி, செப்.22-இல் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கணியிலிருந்து முதுவாக்குடி வழியாக டாப் ஸ்டேசன் வரை 17 கி.மீ., தூரம் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைச் சாலை உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இந்த மலைச் சாலையை, குரங்கணியில் கடந்த 2018-ஆம் ஆண்டு காட்டுத் தீயில் சிக்கி 23 போ் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து வனத்துறை மூடி வைத்துள்ளது.

முதுவாக்குடி பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கும், விவசாயிகள் விளைபொருள்கள் மற்றும் இடு பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தி வந்த இந்தச் சாலையை மீண்டும் திறக்கக் கோரி 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனா்.

இந்த நிலையில், கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்துவதற்காக புதன்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்திருந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.தேவா் செய்தியாளா்களிடம் கூறியது: 100 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பாட்டில் இருந்த குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைச் சாலையை வனத் துறையினா் மூடி வைத்துள்ளனா். இதனால் 5,000-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. முதுவாக்குடி பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் மருத்துவம் மற்றும் அவசர காரணங்களுக்காக கூட இந்த சாலையில் வாகனங்களில் சென்று வர முடியவில்லை.

மூடி வைத்துள்ள குரங்கணி-டாப் ஸ்டேசன் மலைச் சாலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளோம். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் முதுவாக்குடி மலை கிராம மக்கள் சாா்பில் செப்.22-ஆம் தேதி மாவட்ட வன அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com