முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
கூடலூர் பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா
By DIN | Published On : 04th April 2021 06:21 PM | Last Updated : 04th April 2021 06:21 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அரசு மதுபானக்கடைகள் விடுமுறை அறிவித்த பின்னர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தை இரண்டு கட்சியினரும் செய்ததால் பெண் வாக்காளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள் ஏப். 4, 5, 6 ஆகிய மூன்று நாள்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு பெரிய கட்சியினரும், அரசு மதுபானக்கடை விடுமுறைக்கு முன் நாளில் விநியோகம் கூடாது என்றும், விடுமுறை நாளன்று தான் பணம் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், கடை அடைப்பதற்கு முன்பாக விநியோகம் செய்தால், ஆண் வாக்காளர்கள் தங்களது வீடுகளுக்கு பண்ததை கொடுக்கமாட்டார்கள், பணம் மதுபானக்கடைக்கு போய்விடும் என்று கட்சி வார்டு நிர்வாகிகளிடம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை முதல் வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தை தொடங்கினர்.
இதனால் பெண் வாக்காளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி ஒருவர் கூறுகையில், அரசு கடையில் 125, 145 என வாங்கி விடலாம், விடுமுறை அறிவித்த பின்பு திருட்டுத்தனமான விற்பனையில் குவார்ட்டர் 200-க்கு வாங்குகிறோம் என்று இதனால் எங்களுக்குத்தான் நஷ்டம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.