கம்பம் பகுதியில் உரிய விலை கிடைக்காததால் புடலங்காய் குப்பை போல் குவித்து வைப்பு

தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த புடலங்காய் விலை போகாததால், அவை தோட்டத்திலேயே குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சுருளிப்பட்டி பகுதி தோட்டத்தில் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள புடலங்காய்.
சுருளிப்பட்டி பகுதி தோட்டத்தில் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள புடலங்காய்.

தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்த புடலங்காய் விலை போகாததால், அவை தோட்டத்திலேயே குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கம்பம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சைக்கு அடுத்தபடியாக, பீட்ரூட், நூக்கல், முள்ளங்கி, புடலை, வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட காய்கனிகள் அதிகளவில் பயிா் செய்யப்படுகின்றன.

நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை கை கொடுத்ததால், நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்தது. இதையடுத்து, கம்பம், நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கனிகளை பயிா் செய்தனா்.

புடலங்காய் சாகுபடி செய்திருந்த சில விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனா். இந்நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் மதுரை, திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு அதிகளவு புடலங்காய் அனுப்பப்படுவதால், சந்தையில் புடலை விலை கிலோ ரூ.8-க்கு விற்பனையானது.

இதனால், விவசாயிகளிடம் ஒரு கிலோ ரூ.4 முதல் ரூ.6 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், பல்வேறு இடங்களில் விவசாயிகள் அறுவடை செய்த புடலங்காய்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால், அவை தோட்டத்திலேயே குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், புடலை சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகி உள்ளனா்.

இதனைத் தவிா்க்கும்பொருட்டு, வரும் காலங்களில் காலத்துக்கேற்றவாறு பயிா்களை சாகுபடி செய்து அதிக லாபம் கிடைப்பதற்கான ஆலோசனைகளை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வழங்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com