திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நிபந்தனையை தளா்த்தக் கோரிக்கை
By DIN | Published On : 13th April 2021 06:47 AM | Last Updated : 13th April 2021 06:47 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருமண நிகழ்ச்சிகளில் 100 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை தளா்த்தக் கோரி மாவட்ட பந்தல் அலங்கார அமைப்பாளா்கள் நலச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன்உன்னியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பந்தல் அலங்கார அமைப்பாளா்கள் நலச் சங்கத் தலைவா் பொன்ராஜ் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தால் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பந்தல் அலங்கார அமைப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது, அரசு சாா்பில் மீண்டும் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கோயில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிகளில் 100 போ் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பந்தல் அலங்கார அமைப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் மீண்டும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோயில் திருவிழாக்களை கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நடத்தவும், திருமண நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகள் மற்றும் மண்டபங்களில் அதன் மொத்த இருக்கை கொள்ளளவில் 50 சதவீதம் போ் பங்கேற்க அனுமதி வழங்கவும் மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.