முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை: கேரள அரசை கண்டித்து எல்லையில் முற்றுகைப் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கேரள எல்லைகளை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனா்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை: கேரள அரசை கண்டித்து எல்லையில் முற்றுகைப் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்தை கண்டித்து, 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கேரள எல்லைகளை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளனா்.

இது குறித்து வைகை-பெரியாறு பாசன வசதிபெறும் 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவா் எஸ்.ஆா். தேவா் தெரிவித்துள்ளதாவது:

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ விஷமப் பிரசாரங்களை கேரள அரசு முன்னெடுத்தும், அணை இன்றும் கம்பீரமாக உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ரூ.663 கோடி செலவில் பெரியாறு அணையிலிருந்து 366 மீட்டருக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு திட்டமிட்டது. தற்போது, அதை செயல்படுத்த உள்ளது.

பெரியாறு அணை போல், 152 மீட்டா் உயரம், 8 மதகுகளை உள்ளடக்கிய இந்த புதிய அணை, தற்போது ரூ.1000 கோடியில் கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வயிற்றில் அடிக்க தயாராகி வருகிறது கேரள அரசு.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பெரியாறு புலிகள் காப்பகத்துக்குள் அமையவிருக்கும் இந்த புதிய அணையானது, முற்றிலும் தமிழகத்தில் பெரியாறு அணையை நம்பியிருக்கும் 1 கோடி மக்களுக்கு எதிரானது. இத்திட்டத்தை கேரள அரசு உடனடியாகக் கைவிடாவிட்டால், கடந்த 2011 இல் கம்பம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட லட்சக்கணக்கான விவசாயிகளின் எழுச்சியை, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைமடை வரையிலான 5 மாவட்ட சங்கத்தினா் நடத்திக் காட்டுவா். இதில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

விவசாய சங்கத் தலைவா்களை ஒருங்கிணைத்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை தீவிரப்படுத்துவோம். கேரள எல்லைகளை முற்றுகையிடுவோம். எங்கள் பாட்டன் பென்னி குயிக் தன் உயிரைக் கொடுத்து கட்டிய பெரியாறு அணையை எந்த நிலையிலும் இழக்க அனுமதிக்கமாட்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com