எல்லையில் ரோந்துப் பணி தீவிரம்: தமிழக-கேரள அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு
By DIN | Published On : 10th August 2021 11:47 PM | Last Updated : 10th August 2021 11:47 PM | அ+அ அ- |

எல்லைப் பகுதிகளில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைத் தடுக்க ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும் என்று தமிழக-கேரள அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கேரள மாநிலம் தேக்கடியில் இடிக்கி மாவட்ட, தேனி மாவட்ட காவல் மற்றும் கலால் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் கஞ்சா, சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தலைத் தடுக்கவும், சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கவும் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துவது, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய எல்லை சோதனைச் சாவடிகளில் காவலைப் பலப்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தேனி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், உத்தமபாளையம் காவல் துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா் உமாதேவி, கேரள கலால் துறை உதவி இயக்குநா் வி.ஏ.சலீம், இடுக்கி மாவட்டக் கலால் உதவி ஆணையா் அபு ஆப்ரஹாம் மற்றும் இரு மாநில காவல், கலால், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.