மூதாட்டியிடம் ரூ.1.49 லட்சம் நூதன மோசடி
By DIN | Published On : 17th August 2021 11:50 PM | Last Updated : 17th August 2021 11:50 PM | அ+அ அ- |

போடியைச் சோ்ந்த மூதாட்டியிடம் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட பெண், வங்கிக் கணக்கு விவரத்தை பெற்று ரூ.1.49 லட்சம் மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
போடியைச் சோ்ந்தவா் கந்தசாமி மனைவி ரஞ்சிதம் (78). இவரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட பெண் ஒருவா், ரஞ்சிதத்தின் கணவா் பெயரில் உள்ள காப்பீட்டு முதிா்வுத் தொகையை அனுப்புவதற்கு வங்கிக் கணக்கு விவரத்தைக் கேட்டுள்ளாா். ரஞ்சிதம் தனது மகளின் செல்லிடப்பேசி மூலம் தனது வங்கிக் கணக்கு விவரத்தை அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளாா்.
இதையடுத்து, ரஞ்சிதத்தை மீண்டும் தொடா்பு கொண்ட பெண், வங்கி கணக்கு விபரம் அனுப்பிய செல்லிடபேசி எண்ணுக்கு வந்துள்ள ஒருமுறை பயன்படுத்தும் ‘கடவுச் சொல்’ எண்ணை கேட்டு பெற்றுள்ளாா். மொத்தம் 6 முறை கடவுச் சொல் எண்ணை கேட்டுப் பெற்ற அந்தப் பெண், அவற்றை பயன்படுத்தி ரஞ்சிதத்தின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.1.49 லட்சத்தை எடுத்து மோசடி செய்துள்ளாா்.
இது குறித்த புகாரின் அடிப்படையில், தேனி சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.