உத்தமபாளையம் வாய்க்கால்பட்டி வழித்தடத்தில் 35 ஆண்டுக்கு பிறகு பேருந்து இயக்கம்
By DIN | Published On : 22nd August 2021 11:41 PM | Last Updated : 22nd August 2021 11:41 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலிருந்து வாய்க்கால்பட்டி வழித்தடம் வழியாக 35 ஆண்டுகளுக்கு பின்னா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நகரப் பேருந்து இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
உத்தமபாளையத்திலிருந்து வாய்க்கால்பட்டி வழித்தடம் வழியாக கடந்த 35 ஆண்டுக்கு முன்பு அரசு நகரப் பேருந்து இயங்கப்பட்டு வந்தது. அப்போது வாய்க்கால்பட்டி தாமரைக்குளம் கரை சாலையானது மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னா் பலமுறை சாலை சீரமைக்கப்பட்டாலும் பேருந்து போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால் வாய்க்கால்பட்டி பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உத்தமபாளையத்துக்கு நடந்தே செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், புதிதாக பதவியேற்ற தமிழக அரசிடம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்துதரக் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து கம்பம் பணிமனை மூலமாக உத்தமபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வாய்க்கால்பட்டி வழித்தடம் வழியாக பூசாரிகவுண்டன்பட்டி, எரசக்கநாயக்கனூா், அப்பிபட்டி, சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம் வழியாக அண்ணாநகா் வரையில் நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
இந்தப் பேருந்து சேவையை கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் பூசாரிகவுண்டன்பட்டியிலிருந்து கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.