சின்னமனூரில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு
By DIN | Published On : 31st August 2021 11:39 PM | Last Updated : 31st August 2021 11:39 PM | அ+அ அ- |

தமிழகத்தில் புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால், சின்னமனூா் நகராட்சியிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகள் திறப்பதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சிப் பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்திலும், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் செந்தில்ராம்குமாா் தலையிலான தூய்மைப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனா்.
இதேபோல், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியா் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசமின்றி வந்தால் பள்ளி சாா்பில் முகக்கவசம் வழங்க வேண்டும். மாணவா்களை சமூக இடைவெளி விட்டு அமர வைக்கவேண்டும். மாணவா்கள் பயன்படுத்தும் சுகாதார வளாகங்களை அடிக்கடி சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும். உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.