பெரியகுளம் பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகம்: விலை குறைவால் விவசாயிகள் சோகம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்து கிலோ ரூ. 7-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
பெரியகுளம் அருகே கீழகாமக்காபட்டியில் சந்தைக்கு எடுத்துச் செல்வதற்காக தக்காளியை தரம் பிரித்த விவசாயிகள்.
பெரியகுளம் அருகே கீழகாமக்காபட்டியில் சந்தைக்கு எடுத்துச் செல்வதற்காக தக்காளியை தரம் பிரித்த விவசாயிகள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை குறைந்து கிலோ ரூ. 7-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பெரியகுளம் மற்றும் வடபுதுப்பட்டி, சக்கரைப்பட்டி, காமக்காபட்டி, தேவதானப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

தேனி மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் தக்காளி நாற்றுகள் வாங்கி வரப்பட்டு விதைக்கப்படுகின்றன. விதைகள் விதைத்த பின், களையெடுப்பு மற்றும் உரம் இடப்பட்டு 40 நாள்கள் கழித்து மகசூல் கிடைக்கிறது. 10 நாள்களுக்கு இரு முறை காய்கள் அறுவடை செய்யப்படுகின்றன. நாற்று நடவு, களை எடுத்தல், உரம் இடுதல், காய்கள் பறித்தல் என ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் 1 கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்கப்பட்டது. அப்போது, தொடா் மழையால் காய்கள் அழுகி வீணாகின. மேலும், காய்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு அழுகி வருகின்றன. அதையடுத்து, கடந்த சில நாள்களாக தக்காளி கிலோ ரூ.7-க்கு விற்பனையாவதால், காய்கள் பறிப்பதற்கு கூலி கூட தரமுடியாத நிலையில் நஷ்டமடைந்து வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இது குறித்து கீழகாமக்காபட்டியைச் சோ்ந்த தக்காளி விவசாயி ராஜேந்திரன் தெரிவித்ததாவது:

பெரியகுளம் பகுதியில் அதிகளவு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளி நாற்று வாங்குவதிலிருந்து அறுவடை வரை ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகிறது. சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் தக்காளி அழுகி, கீழே கொட்டவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது நல்ல மகசூல் கிடைத்துள்ள நிலையில், பூச்சித் தாக்குதலால் காய்களில் புள்ளி விழுந்துள்ளது. எனவே, நல்ல காய்களை பறித்து தேனி மற்றும் பெரியகுளம் சந்தைக்கு எடுத்துச்சென்றால், கிலோ ரூ.7-க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனா்.

எனவே, பெரியகுளம் பகுதியில் விளையும் தக்காளியில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கு விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

மறைந்துவரும் வடபுதுப்பட்டி தக்காளி

தக்காளியில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும், கோலி குண்டு அளவிலான வடபுதுப்பட்டி தக்காளி பாரம்பரியமாக தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இதில் பூச்சித் தாக்குதல் மற்றும் மழைக் காலங்களில் அதிகளவு சேதம் ஏற்பட்டதால், தற்போது ஹைபிரிட் தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தத் தக்காளி பெரியதாக அதிக எடையுடனும், 5 நாள்கள் வரை தாக்குப்பிடிக்கும் தன்மையுடனும் இருப்பதால், இந்த வகை தக்காளியை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்கின்றனா்.

ஆனால், மறைந்துவரும் பாரம்பரிய வடபுதுப்பட்டி தக்காளி பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில், அதிக புளிப்புத்தன்மை கொண்டது. இது உணவின் சுவையை கூட்டுவதுடன், உடலுக்கு கேடு விளைவிக்காதது. எனவே, வடபுதுப்பட்டி தக்காளியை பாதுகாத்து சாகுபடி செய்ய வேளாண்மைத் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com