கம்பம் மெட்டு மலைச்சாலையில் தோட்ட தொழிலாளர்களின் உயிரோடு ஒரு விளையாட்டு 

கம்பம்மெட்டு மலைச்சாலையில், அளவுக்கு அதிகமான கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள், ஒன்றுக்கொன்று போட்டி போட்டு செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
கம்பம் மெட்டு மலைப்பாதையில் கூலி தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப், விபத்து ஏற்படும் அளவில்  ஒன்றோடொன்று முந்தி செல்லுகிறது.
கம்பம் மெட்டு மலைப்பாதையில் கூலி தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப், விபத்து ஏற்படும் அளவில் ஒன்றோடொன்று முந்தி செல்லுகிறது.

கம்பம்மெட்டு மலைச்சாலையில், அளவுக்கு அதிகமான கூலித்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள், ஒன்றுக்கொன்று போட்டி போட்டு செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்து நடந்தால் மட்டுமே விழித்துக்கொள்ளும் போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள், விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம், மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம, நகரப்பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் கூலித்தொழிலாளர்கள் கேரளப்பகுதிகளான குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை போன்ற பகுதிகளிலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலிவேலைக்கு சென்று திரும்புகின்றனர். இவர்களை அழைத்துச்செல்ல தோட்ட நிர்வாகத்தினர் ஒப்பந்த முறையில் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கம்பம் மெட்டு மலைச்சாலைகளில் அசுர வேகத்தில் இந்த வண்டிகள் அணிவகுத்துச் செல்கிறது. மாலைநேரங்களில் வேலை முடித்து தொழிலாளர்களை திரும்ப அழைத்துவரும்போது, இந்த ஜீப்புகள் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றை ஒன்று முந்திச்செல்கின்றன. அந்த நேரத்தில் ரோட்டில் நடைபயிற்சி செல்பவர்களும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த பீதிக்குள்ளாகி உயிரை கையில் பிடித்தபடி செல்கின்றனர்.

இதில் பல ஓட்டுநர்களுக்கு உரிமமும், வண்டிகளுக்கு முறையான ஆவணங்களும் இருப்பதில்லை. ஒரு வண்டியில் 8 முதல் 10 பேர்கள் வரையில் மட்டுமே செல்ல அனுமதியிருந்தும், அறிவுறுத்தப்பட்டும், 15 முதல் 20 கூலித்தொழிலாளர்கள் வரை ஒரே வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். கடந்த ஒருசில ஆண்டுகளில் மட்டும் ஜீப்புகளின் அதிவேக விபத்தால் 30 க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் தேவாரத்தில் இருந்து கட்டப்பனை சென்ற கூலிதொழிலாளர்களின் ஜீப் ஒன்று வண்டன்மெட்டு அருகே கவிழ்ந்ததில் ஒரு கூலித்தொழிலாளி இறந்து போனார். உரிமத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாக ஆட்களை ஏற்றக்கூடாது. வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும். ஓட்டுநருக்கு உரிமம் இருக்க வேண்டும். ஒவ்வொரு வண்டிக்கும் குறைந்தது 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். 

நகர் பகுதியிலும், மலைச்சாலையிலும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தக்கூடாது. அதிக வேகமாக செல்லக் கூடாது. மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது என காவல் துறையின் உத்தரவுகள் இருந்தாலும் இவர்கள் யாரும் அதை பின்பற்றுவதாக தெரிவதில்லை. இதை கண்காணிக்க வேண்டிய போலீசாரோ, வாகன போக்குவரத்து அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை.  விபத்து நடக்கும் சமயத்தில் மட்டும் திடீர் வாகன சோதனை நடத்தி, அபராதம் விதிக்கின்றனர்.

அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லும் ஜீப்.

தொழிலாளர்களின் உயிரை வைத்து சாகச விளையாட்டு நடத்தும், ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த முருகன் கூறுகையில், ஒருசில வாகனங்களில் அனுபவமில்லாத சிறு வயதுடையவர்களே ஓட்டுநர்களாக உள்ளனர்.  ஜீப் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்ல வேண்டும் என இவர்கள் போட்டிபோட்டு ஓட்டிச் செல்வதாலேயே விபத்துக்கள் ஏற்படுகிறது. 

இந்த விபத்தினால் பல கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்பம் வறுமையில் உள்ளனர்.  விபத்து நடந்தபின் மட்டுமே சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்ற நேரங்களில் கண்டுகொள்வது கிடையாது.  அதிகஅளவில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை சோதனைச்சாவடி போலீசாரும் கண்டு கொள்வதில்லை. 

கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால்தான் இனிவரும் நாள்களில் பல அப்பாவி கூலித் தொழிலாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும், என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com