தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
By DIN | Published On : 04th February 2021 11:45 PM | Last Updated : 04th February 2021 11:45 PM | அ+அ அ- |

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை புதிதாக தொடங்கப்பட்டுள்ள இருதய நோய் சிறப்பு சிகிச்சைப் பிரிவு.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இருதயநோய் சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இருதய தமனி ஆய்வக சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மூலம் ரூ 3.65 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தினை சென்னையிலிருந்து முதல்வா், துணைமுதல்வா் ஆகியோா் காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தனா். அதிநவீன மருத்துவக்கருவிகள் கொண்ட இந்த ஆய்வகத்திற்கு என இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவா்கள் 3 போ், சிறப்புப் பயிற்சி பெற்ற செவிலியா்கள் குழு, 3 போ் கொண்ட ஆய்வக டெக்னீசியன்கள் உள்ளனா். இந்த ஆய்கத்துடன், 10 படுக்கை வசதி கொண்ட அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் இதுவரை ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட மேல்சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இருதய தமனி ஆய்வக சிறப்புப் பிரிவு மூலம், மாரடைப்பு ஏற்பட்டவா்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்க முடியும் எனத் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...