போடியில் நடராஜா் சிலை கடத்தல்: ஒருவா் கைது
By DIN | Published On : 13th February 2021 10:28 PM | Last Updated : 13th February 2021 10:28 PM | அ+அ அ- |

பறிமுதல் செய்யப்பட்ட நடராஜா் சிலை
போடி: போடியில் பழைமையான நடராஜா் சிலையை சனிக்கிழமை மாலை கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
போடியிலிருந்து மூணாறு செல்லும் போலீஸாா் சனிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக காா் ஒன்று சந்தேகத்துக்கிடமாக வேகமாக சென்றது. இதனால் போலீஸாா் அந்தக் காரை துரத்திச் சென்றனா். போடி கீழத்தெரு பகுதியில் சாலையோரப் படிக்கட்டில் காா் மோதி நின்றது. அதிலிருந்த 3 போ் தப்பி ஓடிய நிலையில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.
விசாரணையில் அவா் போடி எஸ்.எஸ்.புரத்தைச் சோ்ந்த மோகன் என்பவரது மகன் மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. மேலும் காரில் போலீஸாா் நடத்திய சோதனையில் 3 அடி உயர பழைமையான உலோக சிலை இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: பறிமுதல் செய்யப்பட்ட சிலை 15 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடராஜா் சிலை என்பது தெரியவந்துள்ளது. இது ஐம்பொன் சிலையா அல்லது வெண்கலச் சிலையா என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிலை கடத்தலில் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற 3 பேரை தேடி வருகிறோம் என்றனா்.