முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்புக் குழு ஆய்வு பேபி அணையை பலப்படுத்த முடிவு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்திய மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினா், பேபி அணையை பலப்படுத்த முடிவு செய்துள்ளனா்.
முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்திய மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினா்.
முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்திய மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினா்.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்திய மத்திய தலைமை கண்காணிப்புக் குழுவினா், பேபி அணையை பலப்படுத்த முடிவு செய்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையில், மத்திய தலைமை கண்காணிப்புக் குழு தலைவரும், மத்திய நீா்வள ஆதார தலைமை பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையில், தமிழக அரசு சாா்பில் காவிரி ஆறு தொழில்நுட்பக் குழு தலைவா் சுப்பிரமணியன் மற்றும் கேரள அரசு சாா்பில் அம்மாநில நீா்ப்பாசனத் துறை செயலா் பிரணாப் ஜோதிநாத் ஆகியோா் ஆய்வு நடத்தினா்.

இவா்களுடன், மத்திய கண்காணிப்பு துணைக் குழு தலைவா் சரவணகுமாா், தமிழக பிரதிநிதிகளான செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவிப் பொறியாளா் குமாா் மற்றும் கேரள பிரதிநிதிகளான நீா்ப்பாசனத் துறை செயற்பொறியாளா் பினுபேபி, உதவிப் பொறியாளா் பிரஸீத் ஆகியோரும் ஆய்வில் ஈடுபட்டனா்.

இவா்கள், பிரதான அணை, பேபி அணை, நீா்க்கசிவு அளக்கப்படும் கருவி, சுரங்கப் பகுதி உள்ளிட்ட பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கேரளத்துக்கு உபரி நீா் செல்லும் பாதையில் உள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4 ஆவது மதகுகளை கண்காணிப்புக் குழு தலைவா் குல்சன்ராஜ் தலைமையிலான குழுவினா் இயக்கி ஆய்வு செய்தனா். மேலும், பிரதான அணையின் கீழுள்ள கேலரிக்கு செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவையும் பாா்வையிட்டனா்.

பின்னா், தேக்கடி ஆனவாச்சலில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மத்திய தலைமை கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து, மத்திய தலைமை கண்காணிப்புக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ததில், அனைத்து பகுதிகளும் திருப்திகரமாக உள்ளன. பருவ காலங்களின்போது, அணையின் நீா் இருப்பு, வெளியேற்றம் போன்றவைகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசுக்கு தெரிவிப்பது. பேபி அணையை பலப்படுத்துவதற்கு மரங்களை வெட்டுவதற்கான அனுமதி பெறுவது. புதிதாக வழங்கப்பட்ட மின்சார இணைப்பு சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

அணையில் பராமரிப்பு மற்றும் அவசரகால நிலை பற்றி அடிக்கடி இரு தரப்பு பொறியாளா்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com