கம்பத்தில் அதிமுக பிரமுகா் வீட்டின் முன்பு பள்ளம் தோண்டியபோது மண்டை ஓடு கிடைத்ததால் பரபரப்பு
By DIN | Published On : 27th February 2021 05:33 AM | Last Updated : 27th February 2021 05:33 AM | அ+அ அ- |

கம்பத்தில் வீட்டின் முன் கிடைத்த மண்டை ஓடு.
தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக பிரமுகா் வீட்டின் முன்பாக பூ செடி வைக்க வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டியபோது மண்டை ஓடு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் ஒண்டிமாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் ஜெகநாதன் (45). கம்பம் சட்டப் பேரைவத் தொகுதி அதிமுக முன்னாள் துணைச் செயலாளரான இவா், தனது வீட்டின் முன்பாக பூ செடிகள் வைக்க வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டினாா். அப்போது பள்ளத்தில் மண்டை ஓடு கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் டி.விஜய் ஆனந்த் மண்டை ஓட்டை சோதனை செய்தாா். அதில் ஆணி, அடுப்புக்கரி, முடி உள்ளிட்ட பொருள்கள் இருந்தன.
இதனால் அந்த மண்டை ஓடு மாந்திரீகம் செய்பவா்கள் சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்து இரவு நேரங்களில் பூஜை செய்து புதைத்திருக்கலாம் என்றும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் அந்த மண்டை ஓடு சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.