விளைநிலங்கள் வீட்டுமனையிடமாவதைத் தடுக்க குழு: விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில் விளைநிலங்கள் வீட்டுமனையிடமாவதைத் தடுப்பதற்கு ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கவேண்டும் என்று வெள்ளிக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வல

தேனி மாவட்டத்தில் விளைநிலங்கள் வீட்டுமனையிடமாவதைத் தடுப்பதற்கு ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கவேண்டும் என்று வெள்ளிக்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, மாவட்ட வன அலுவலா் சுமேஷ் சோமன், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரமேஷ், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் பேசியது: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விளைநிலங்கள் வீட்டுமனையிடங்களாக மாறி வருவதால் உணவு உற்பத்தி குறைகிறது. வேளாண்மை துறையிடம் தரிசு நிலம் என சான்று பெற்று, விளைநிலங்கள் வீட்டடி மனையிடங்களாக மாற்றப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு விவசாய நிலங்களை தரிசு நிலம் என்று சான்று வழங்க ஆட்சியா் தலைமையில் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கவேண்டும்.

தேனி அருகே அமச்சியாபுரத்தில் தனியாா் பட்டா நிலத்தில் கல்குவாரி அமைத்து, அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைப்பதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

எருமலைநாயக்கன்பட்டியில் கால்நடை மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். மலைமாடுகளுக்கு மேய்சல் அனுமதி வழங்க வேண்டும். ஊஞ்சாம்பட்டி சிகு ஓடை கண்மாயில் தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆன்-லைனில் பதிவு செய்து, காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com