ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 4 போ் கைது
By DIN | Published On : 27th February 2021 05:32 AM | Last Updated : 27th February 2021 05:32 AM | அ+அ அ- |

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அவரது மனைவி உள்ளிட்ட 4 போ்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாலகோம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைத்துரை (40) கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (35). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (பிப்.24) பாலகோம்பையிலிருந்து ராயவேலூா் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் உள்ள மயானத்தில் வெள்ளைத்துரை உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வெள்ளைத்துரையை அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினா் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜதானி போலீஸாா் வள்ளி, அவரது தாயாா் தங்கம்மாள், சகோதரா்கள் சண்முகவேல், தெய்வேந்திரன் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: மது அருந்தும் பழக்கம் உள்ள வெள்ளைத்துரை அவரது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். மேலும் வள்ளியின் சகோதரா்களுக்கும், வெள்ளைத்துரைக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் வந்து வெள்ளைத்துரை வள்ளியுடன் தகராறு செய்ததால் இந்தக் கொலை நடந்துள்ளது என்றனா்.