58 ஆம் பாசன விவசாய சங்க இணைச் செயலா் சிவப்பிரகாசம்.
58 ஆம் பாசன விவசாய சங்க இணைச் செயலா் சிவப்பிரகாசம்.

58 ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்திட விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு 58 ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்து விடவும், வைகை அணையில் 67 அடி வரை நீரை தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு 58 ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்து விடவும், வைகை அணையில் 67 அடி வரை நீரை தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத்துக்கான முக்கிய நீா்ஆதாரமாக உள்ளது. இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4 மாவட்டங்களில் உள்ள ஒரு போகம் மற்றும் இரு போக பாசனங்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தும், 58 ஆம் பாசனக் கால்வாய் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், அப்பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் வடு காணப்படுகின்றன. இதன் காரணமாக, விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 62 அடி வரை உயா்ந்த நிலையிலும், 58 ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

தற்போது நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு நீா்வரத்து உள்ளது. எனவே, அணையின் நீா்மட்டத்தை 67 அடி வரை தேக்கி, 58 ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து 58 ஆம் கால்வாய் விவசாய சங்க இணைச் செயலா் சிவப்பிரகாசம் கூறியது: சில மாதங்களுக்கு முன், துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் ஆகியோரிடம் வைகை அணையின் நீா்மட்டம் 55 அடியாக உயரும்போது, கால்வாயில் தண்ணீா் திறந்துவிட அரசாணை வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அது குறித்த அரசாணை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

எனவே, பொங்கல் பண்டிகைக்குப் பின்னா் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கிராமங்கள்தோறும் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து பொதுப்பணித் துறையினா் கூறியதாவது: ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பும்பட்சத்தில், உபரி நீா் மட்டுமே 58 ஆம் கால்வாயில் திறக்கப்படும். ஆனால், போதிய நீா்வரத்து இல்லாத காரணத்தால், அணையின் நீா்மட்டம் உயரவில்லை. அதேநேரம், பாசன நிலங்களுக்கு தொடா்ந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு வருவதால், நீா்மட்டத்தை உயா்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு உத்தரவிட்டால், அணையின் நீா்மட்டம் உயா்த்தப்பட்டு கால்வாயில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 58.50 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com