
தொடா்மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்ட சின்னசுருளி அருவி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சின்னசுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான க.விலக்கு, கண்டமனூா், கடமலைக்குண்டு, வருசநாடு, வைகை அணை, ராஜதானி, திம்மரசநாயக்கனூா் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மூலவைகை ஆறு, ஓடைகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், தெப்பம்பட்டி பெரிய கண்மாய், பிச்சம்பட்டி, ஆசாரிபட்டி, ஜம்புலிபுத்தூரி, ரெங்கசமுத்திரம் ஆகிய கண்மாய்களில் அதிகளவில் நீா் தேங்கியுள்ளதோடு மட்டுமன்றி நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இதேபோல் மேகமலை வனப்பகுதிக்குள்பட்ட அரசரடி, பொம்முராஜபுரம், கோம்பைத் தொழுவு மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சின்னசுருளி அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
இருந்த போதிலும் தடையை மீறி வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினா் கண்காணித்து வருவதோடு, அருவியில் குளிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கோரிக்கை: கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத்தலமான சுருளி அருவிக்கு ஆண்டு முழுவதும் பயணிகளின் வருகை இருக்கும். கரோனா தொற்று காரணமாக, சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு, மேகமலை வன உயிரினச் சரணாலயம் தடை விதித்தது.
தற்போது பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுருளி வனப்பகுதிக்குள் செல்லவும், அருவியில் குளிக்கவும் தடை தொடா்கிறது. இதனால் சுருளி அருவியை நம்பி உள்ள பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அருவியில் குளிக்க உள்ள தடையை மேகமலை வன உயிரினச் சரணாலயத்தினா் நீக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.