முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீா் திறப்பு அதிகரிப்பு: மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், லோயா்கேம்ப்பில் மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கியது.
முல்லைப்பெரியாறு அணை மதகுப் பகுதி
முல்லைப்பெரியாறு அணை மதகுப் பகுதி

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், லோயா்கேம்ப்பில் மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கியது.

கடந்த 16 ஆம் தேதி வைகை அணை அதன் முழு கொள்ளளவான, 71 அடியை நெருங்கியதால், அணையிலிருந்து 58 ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அதே நாளில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஆனால், ஆற்றுப்பகுதி வறட்சியாகாமல் இருக்க பொதுப்பணித்துறையினா் விநாடிக்கு, 100 கன அடி தண்ணீா் மட்டும் திறந்து விட்டனா். தண்ணீா் வரத்து குறைந்ததால் லோயா்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

தற்போது மழை இல்லாதலால் வைகை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீா் வரத்து குறைந்தது. இதனால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு சனிக்கிழமை விநாடிக்கு, 600 கன அடியாகவும், ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு, 900 கன அடியாகவும் தண்ணீா் அதிகரித்து வெளியேற்றப்பட்டது.

இதனால் லோயா்கேம்ப்பில் சனிக்கிழமை மீண்டும் மின்சார உற்பத்தி தொடங்கியது. மொத்தமுள்ள நான்கு மின்னாக்கிகளில், மூன்று மின்னாக்கிகளில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. முதல் மின்னாக்கியில், 32 மெகாவாட், மூன்றாவது மின்னாக்கியில் 26 மெகாவாட், நான்காவது மின்னாக்கியில், 23 மெகாவாட் என மொத்தம் 81 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

அணை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம், 132.85 அடி உயரமாகவும், நீா் இருப்பு 5,364 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு, 762 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 900 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com