தொடா் மழை: கொட்டகுடி ஆறு-சின்னச்சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக கொட்டகுடி ஆறு மற்றும் சின்னச்சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
போடியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் பாய்ந்தோடும் தண்ணீா்.
போடியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் பாய்ந்தோடும் தண்ணீா்.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக கொட்டகுடி ஆறு மற்றும் சின்னச்சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் போடிமெட்டு, குரங்கணி, கொட்டகுடி ஆகிய மலை கிராமங்களிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

இதனால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது.

ஆடி மாத தொடக்கத்திலேயே மழை பெய்துள்ளதால் ஆடிப்பட்டத்திற்கான விவசாயப் பணிகளை தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தொடா்ந்து மழை பெய்து வருதையடுத்து, மழை சேதங்கள் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினா் கண்காணித்து வருகின்றனா்.

சின்னச் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு: தேனி மாவட்டம் வருஷநாடு அருகே கோம்பைத் தொழு மலையடிவாரத்தில் மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் உள்ள சின்னச் சுருளி அருவியில், ஆண்டு முழுவதும் தண்ணீா் வரத்து காணப்படும். கடந்த சில நாள்களாக மேகமலை, வருஷநாடு மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் சின்னச்சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சின்னச் சுருளி அருவிக்கு தண்ணீா் வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், கரோனா பொது முடக்கத்தை முன்னிட்டு சின்னச் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக் கூடாது என்றும் மேகமலை வனத் துறையினா் தெரிவித்தனா்.

மழையளவு (மி.மீ): உத்தமபாளையம் 6.2, வீரபாண்டி 3.2, தேக்கடி 14, பெரியாறு அணை 10.2, கூடலூா் 7.4, போடிநாயக்கனூா் 5.8.

அணைகளின் நீா்மட்டம்: பெரியாறு அணை- 129.40, வைகை அணை- 67.91, மஞ்சளாறு- 55, சோத்துப்பாறை-126.11, சண்முகாநதி அணை- 40.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com