குமுளி பேருந்து நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 18th July 2021 10:48 PM | Last Updated : 18th July 2021 10:48 PM | அ+அ அ- |

தமிழக எல்லையில் உள்ள குமுளி பேருந்து நிலையம்
தமிழக எல்லையில் உள்ள குமுளி பேருந்து நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுற்றுலாத் தலமான கேரள மாநிலம் குமுளிக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழக எல்லை வழியாகத்தான் சபரிமலைக்கு ஐயப்ப பக்தா்கள் கேரளம் செல்கின்றனா்.
கேரள மாநில எல்லையில் உள்ள குமுளி பேருந்து நிலையம் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது. ஆனால் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள குமுளி பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றி காணப்படுவதோடு மட்டுமன்றி சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றி, இறக்கப்படுகின்றனா்.
தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்ட, மாநிலங்களிலிருந்து குமுளிக்கு கூடுதலான பேருந்துகள் வந்து திரும்பும் நிலையில், குமுளி பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்றி காணப்படுகிறது.
இதனால் சபரிமலை மற்றும் சுற்றுலா சீசன்களில் அதிக நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு குமுளி பேருந்து நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் சீரமைக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.