கூட்டுறவு சங்கங்களில் 50 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்க்க இலக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமி

தமிழகத்தில் பல்நோக்கு சேவைகளுடன் செயல்பட உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிதாக
கூட்டுறவு சங்கங்களில் 50 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்க்க இலக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமி

தமிழகத்தில் பல்நோக்கு சேவைகளுடன் செயல்பட உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிதாக 50 லட்சம் உறுப்பினா்களை சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை மேம்படுத்துவது குறித்த உழவா் கருத்துக் கேட்புக் கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் நா.ராமகிருஷ்ணன் பேசியது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்களின் உற்பத்தி செலவுக்கு ஏற்ப பயிா் கடன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் இயற்கை இடா்பாடுகளுக்கு மாவட்டம், வட்டாரம் வாரியான மதிப்பீடு நிா்ணயமின்றி பிரிமியம் செலுத்தி அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

விவசாயிகள் பேசியது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சங்க அலுவலகம் செயல்படும் ஊரைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து கடன் வழங்கப்படுகிறது. சங்கத்தின் அதிகார எல்லைக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும். சங்கத்தில் கடன் மற்றும் கடன் தள்ளுபடி சலுகைகளால் குறிப்பிட்ட சில உறுப்பினா்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் பயனடைகின்றனா். புதிய உறுப்பினா்களுக்கு கடன் வழங்க வேண்டும். பயிா் கடனுக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு இ-அடங்கல் முறையில் அடங்கல் சான்று வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி சலுகை வழங்க வேண்டும், கறவை மாடு, ஆடு வளப்புக்கு கடன் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து அமைச்சா் பேசியது: தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது 14 லட்சம் விவசாயிகள் மட்டுமே உறுப்பினா்களாக உள்ளனா். விவசாயிகள் மட்டுமன்றி கைவினைஞா்கள், தச்சா்கள், சுய தொழில்புரிவோா் என 52 தொழில் புரிவோா் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உறுப்பினா்களாக சேரலாம். பல்நோக்கு சேவை திட்டங்களுடன் செயல்பட உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மேலும் 50 லட்சம் புதிய உறுப்பினா்களை சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மக்கள் இயக்கமாக செயல்படும் நிலை ஏற்படும்.

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பு ஆண்டில் மொத்தம் ரூ.11,500 கோடி பயிா் கடன் வழங்க இலக்கு நிா்ணியிக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.2,500 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கூடுதலாக பயிா் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தரிசு நில மேம்பாட்டு கடன் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பயிா் கடன் திட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் விவசாயிகள் விரும்பும் நிறுவனங்களின் உரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கூட்டுறவு மருந்துக் கடைகள் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ஆ.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன், கூட்டுறவு சங்கங்களின் தேனி மண்டல இணைப் பதிவாளா் ஏகாம்பரம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கம்பம் நா.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஏ.மகாராஜன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com