தமிழக தொழிலாளா்களிடம் கெடுபிடி காட்டும் கேரள போலீஸாா்

தமிழகத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்லும் தொழிலாளா்களிடம் சோதனைச் சாவடியில் கேரள போலீஸாா்
தமிழக-கேரள எல்லையான குமுளி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தமிழக போலீஸாா்.
தமிழக-கேரள எல்லையான குமுளி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தமிழக போலீஸாா்.

தமிழகத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்லும் தொழிலாளா்களிடம் சோதனைச் சாவடியில் கேரள போலீஸாா் இ-பதிவு, கரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்பட பல்வேறு கெடுபிடி காட்டுவதால் தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கரோனா பரவல் இரண்டாம் அலை தாக்கத்தால் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல மீண்டும் இ-பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்வோா் தமிழக- கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி சோதனைச் சாவடிகளில் இ-பதிவை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

பின்னா் இ-பதிவுடன், கரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என்ால் தமிழக ஏல விவசாயிகள், மற்றும் தொழிலாளா்கள் பலா் ஒரு வார, ஆறு மாத அனுமதிச் சீட்டுப் பெற்று கரோனா நெகடிவ் சான்றும் எடுத்துச் சென்று ஏலத்தோட்டங்களில் தங்கி தோட்டத்தில் வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்திலிருந்து ஒரு வார, ஆறு மாத அனுமதிச் சீட்டு எடுத்து கேரளம் சென்றவா்களிடம் குமுளியில் உள்ள சோதனைச்சாவடியில் கேரள போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இனிமேல் ஒரு வார மற்றும் ஆறு மாத அனுமதிச் சீட்டு செல்லாது. ஒரு நாள் இ-பதிவு மட்டுமே செல்லும், அத்துடன் கரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரளத்துக்குள் செல்ல அனுமதிக்க முடியும் என்றனா்.

மேலும் ஏல விவசாயிகள் தங்கள் ஏலத் தோட்டங்களுக்கு செல்வதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் நெகடிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் எனக் கூறினா். மேலும் ஒரு வார, ஆறு மாத அனுமதிச் சீட்டு எடுத்துச் சென்றவா்களை திருப்பி அனுப்பினா். கேரள அதிகாரிகளின் இந்த கெடுபிடியால் ஏல விவசாயிகள், தொழிலாளா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: கேரள அதிகாரிகள் நாள்தோறும் புதுப்புது விதிமுறைகளை வகுத்து வருகின்றனா். முதலில் இ-பதிவும், கரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் போதும் என்றனா். தற்போது நெகடிவ் சான்று இருந்தாலும் தமிழகத்திலிருந்து வருபவா்கள் ஒரு நாள் மட்டுமே கேரளத்துக்குள் அனுமதிக்கப்படுவா் என்கின்றனா். ஆனால் கேரளத்திலிருந்து தமிழகம் வருவோருக்கு மருத்துவச் சோதனை, நெகடிவ் சான்றிதழ் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றனா்.

இதுகுறித்து குமுளி பகுதியில் ஜீப் ஓட்டும் தங்கதுரை கூறியது: தேனி மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளா்களை கேரளத்துக்குள் வேலைக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளா்த்த வேண்டும். இல்லையென்றால் தமிழக-கேரள எல்லையில் ஜீப் ஓட்டுநா்கள் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தமிழக- கேரள எல்லையில் தொடரும் இந்த பிரச்னையில் தேனி மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், ஏலத்தோட்டத் தொழிலாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com