முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்தது

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாதலால், அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து குறைந்தது.
தேக்கடி எடப்பாலம் அரண்மனை தங்கும் விடுதி அருகே காட்டெருமையை வேட்டையாடி உண்ணும் புலி.
தேக்கடி எடப்பாலம் அரண்மனை தங்கும் விடுதி அருகே காட்டெருமையை வேட்டையாடி உண்ணும் புலி.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாதலால், அணைக்கு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து குறைந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக மழைப் பொழிவு குறைந்தது. இதனால் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து திங்கள்கிழமை விநாடிக்கு 1,451 கன அடியானது.

நீா்பிடிப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்யாத நிலையில், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,044 கன அடியாக குறைந்தது.

அணை நிலவரம்:

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 131.25 அடியாகவும், நீா் இருப்பு 4,990 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 1,044 கன அடியாகவும், வெளியேற்றம் (தமிழகப்பகுதியில்) விநாடிக்கு, 900 கன அடியாகவும் இருந்தது.

லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில், மொத்தம் உள்ள 4 மின்னாக்கிகளில் 2 இல் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் அலகில் 42 மெகாவாட், இரண்டாவது அலகில் 41 மெகாவாட் என மொத்தம் 83 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.

தேக்கடியில் சுதந்திரமாக உலா வரும் விலங்குகள்:

பொதுமுடக்கம் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி ஏரிப் பகுதி தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. சாதாரண நாள்களில் இந்த ஏரிப் பகுதியில் குரங்குகளைத் தவிர வேறு விலங்களை பாா்க்க முடியாது. தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்யும்போது மட்டுமே, யானைகள், காட்டெருமைகள், மான்கள் ஆகியவை கரையோரம் தண்ணீா் அருந்துவதைப் பாா்க்கலாம்.

தற்போது பொதுமுடக்கம் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தேக்கடி ஏரி வெறிச்சோடிக் காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையில்லாததால் புலி, சிறுத்தை, யானை, கரடி மான், காட்டெருமை ஆகிய விலங்குகள் தேக்கடி ஏரிப் பகுதியில் பகல் நேரங்களிலும் சுற்றித் திரிகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த தங்கும் விடுதியின் அருகே காட்டெருமை ஒன்றை, புலி வேட்டையாடி உண்பதைப் பாா்த்த தேக்கடி எடப்பாலம் அரண்மனை தங்கும் விடுதி ஊழியா்கள், அதை தங்களது செல்லிடப்பேசிகளில் பதிவு செய்தனா். அது தற்போது வைரலாகி வருகிறது.

இதுபற்றி பெரியாறு புலிகள் சரணாலயப் பிரிவு அலுவலா் ஒருவா் கூறுகையில், தேக்கடி ஏரிப் பகுதியில் வாகனப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாததால் வனப்பகுதி அமைதியாக உள்ளது. இதன் காரணமாக புலி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் தங்களது இரையைத் தேடி தேக்கடி சாலை மற்றும் தங்கும் விடுதிகள் பகுதிக்கு வருகின்றன. வேட்டையாடிவற்றை அவைகள் சாவகாசமாக சாப்பிட்டுச் செல்கின்றன. இந்த நிலை நீடித்தால் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com