முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
குடும்ப அட்டைதாரா்களுக்கு 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம்: ரேஷன் கடை பணியாளா்கள் டோக்கன் விநியோகம்
By DIN | Published On : 12th June 2021 08:50 AM | Last Updated : 12th June 2021 08:50 AM | அ+அ அ- |

தமிழக அரசின் கரோனா பொதுமுடக்க நிவாரணத் தொகையின் 2 ஆவது தவணையான ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் பெற, பெரியகுளம் பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பெரியகுளம் பகுதியில் உள்ள ஏ-485 கூட்டுறவு பண்டகசாலையில் ஜூன் 15 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அப்போது, பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், பெரியகுளம் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் வீட்டுக்கு நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடை பணியாளா்கள் டோக்கன்களை வழங்கி வருகின்றனா்.
ஒரு நாளைக்கு 200 பேருக்கு மட்டுமே பணம் மற்றும் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அந்த டோக்கனில் கடை எண், தேதி, நேரம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளதால், சரியாக அந்த நேரத்துக்குச் சென்று பொதுமக்கள் தங்களுக்குரிய பொருள்களை பெற்றுச் செல்லலாம் என, நியாயவிலைக் கடை பணியாளா்கள் தெரிவித்தனா்.