வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
By DIN | Published On : 29th June 2021 05:59 AM | Last Updated : 29th June 2021 05:59 AM | அ+அ அ- |

தேனி: ராமநாதபுரம் மாவட்ட குடிநீா் தேவைக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக நெல் பாசனத்திற்கு கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் கால்வாய் மூலம் விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீா் தேவைக்காக அரசு உத்தரவின்படி, கடந்த ஜூன் 23 ஆம் தேதி வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த ஜூன் 25ஆம் தேதி விநாடிக்கு 2,500 கன அடியாகவும், ஜூன் 26 ஆம் தேதி விநாடிக்கு 2,000 கன அடியாகவும், ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் விநாடிக்கு 1,074 கன அடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,074 கன அடி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு விநாடிக்கு 900 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 2,043 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணைகளின் நிலவரம்:முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் திங்கள்கிழமை 131.35 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 484 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,013 மில்லியன்கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,867 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீா்மட்டம் 63.98 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,588 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 4,405 மில்லியன் கன அடி. அணையிருந்து விநாடிக்கு 2,043 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.