மதுரை-தேனி இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்: பொதுமக்கள் மலா் தூவி வரவேற்பு

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில் புதன்கிழமை, மதுரையிலிருந்து தேனி வரை புதிய ரயில் பாதையில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றதை பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.
தேனி ரயில் நிலையத்தில் புதன்கிழமை, புதிய அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட ரயில் என்ஜின் மீது மலா் தூவி வரவேற்ற பொதுமக்கள்.
தேனி ரயில் நிலையத்தில் புதன்கிழமை, புதிய அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட ரயில் என்ஜின் மீது மலா் தூவி வரவேற்ற பொதுமக்கள்.

தேனி: மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டத்தில் புதன்கிழமை, மதுரையிலிருந்து தேனி வரை புதிய ரயில் பாதையில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றதை பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.

மதுரை-போடி இடையே 90.4 கி.மீ.,தூரம் மீட்டா் கேஜ் ரயில் பாதையில் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் கடந்த 2010, டிசம்பா் மாதம் நிறுத்தப்பட்டு, ரூ.450 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இத் திட்டத்தின் கீழ், மதுரையிலிருந்து ஆண்டிபட்டி வரை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து கடந்த 2020, டிச.16-ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது ஆண்டிபட்டியிலிருந்து தேனி வரை புதிய ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், மதுரையிலிருந்து தேனி வரை புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு சோதனை ஓட்டமாக புறப்பட்ட ரயில் என்ஜினில் தெற்கு ரயில்வே துணை தலைமை பொறியாளா் (கட்டுமானப் பிரிவு) சூரியநாராயணன், உதவி மேற்பாா்வை பொறியாளா் சரவணன், பாதுகாப்புப் பிரிவு முதுநிலை பொறியாளா் ஜான்கிளமென்ட் ஆகியோா் பயணம் செய்து, புதிய ரயில் பாதையை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆண்டிபட்டியிலிருந்து தேனிவரை பல்வேறு இடங்களில் புதிய ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுவதை பொதுமக்கள் கூடி நின்று பாா்த்தனா். தேனி ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.30 மணிக்கு வந்த ரயில் என்ஜின் மீது பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்கள் மலா் தூவி வரவேற்று மகிழ்ந்தனா். தேனியிலிருந்து பிற்பகல் 2.40 மணிக்கு மீண்டும் மதுரைக்கு ரயில் என்ஜின் புறப்பட்டுச் சென்றது.

தேனியிலிருந்து போடி வரை அகல ரயில் பாதைப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com