முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
பெரியகுளம் அருகே மலைக்கிராமத்திற்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 14th March 2021 05:10 PM | Last Updated : 14th March 2021 05:10 PM | அ+அ அ- |

சோத்துப்பாறையில் குடும்பஅட்டையை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மலைக்கிராமமக்கள்.
பெரியகுளம் அருகே மலைக்கிராமத்திற்கு சாலை வசதி கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சி போடி தாலுகாவில் உள்ளது. அகமலை ஊராட்சி கட்டுப்பாட்டில் ஊரடி, ஊத்துக்காடு உள்பட 10 க்கு மேற்பட்ட மலைகிராமம் உள்ளது. இக்கிராமங்களுக்கு சாலை வசதி கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடி, ஊத்துக்காடு, கருங்கால்பாறை உள்பட 10 க்கு மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
இந்த மலைக்கிராமங்களில் விளைவிக்கப்படும் பொருட்கள் குதிரையின் மூலம் எடுத்து வரப்பட்டு பெரியகுளம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மலைக்கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பல்வேறு முறை போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று அப்பகுதி மக்கள் சோத்துப்பாறையில் குடும்பஅட்டைகளை சாலையில் போட்டும், தேர்தலை புறக்கணிப்போம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடியைச் சேர்ந்த சுரேஷ்பாபு கூறியதாவது; எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு பல்வேறு முறை போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று எங்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டையை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம் என்றார்.