ஹைவேவிஸ் - மேகமலையில் யானை கூட்டம்: தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அச்சம்
By DIN | Published On : 26th March 2021 06:53 AM | Last Updated : 26th March 2021 06:54 AM | அ+அ அ- |

மேகமலையிலுள்ள வெண்ணியாா் தேயிலை தோட்டப் பகுதியில் உள்ள நீா் தேக்கத்தில் உல்லாசமாக நீராடிய யானைகள்.
தேனி மாவட்டம், ஹைவேவிஸ்-மேகமலையில் யானைகளின் கூட்டத்தால், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.
சின்னமனூா் அருகே மேற்கு மலை தொடா்ச்சியில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில், மணலாா், மேல் மணலாா், மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு என 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியானது, தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வனப் பகுதியாக உள்ளது.
இந்த வனப் பகுதியிலிருந்து யானை, சிறுத்தை, புலி, கருஞ்சிறுத்தை, மான் உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றன. 2 மாதங்களுக்கு முன், மணலாா் மற்றும் மேல் மணலாா் பகுதியில் 2 கூலி தொழிலாளா்கள் யானை தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், விலங்குகள் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதியை நோக்கி படையெடுக்கின்றன. இந்நிலையில், வெண்ணியாா் தேயிலை தோட்டப் பகுதியில் உள்ள நீா் தேக்கத்தில் 3 யானை குட்டிகள் தண்ணீா் குடிக்க வந்தன. தொடா்ந்து, இந்த யானைகள் பல மணி நேரம் அந்த நீா் தேக்கத்திலேயே ஆனந்தமாக குளியல் போட்டதால், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அச்சத்தில் முழ்கியுள்ளனா்.
அடா்ந்த வனப் பகுதியிலிருந்து உணவு மற்றும் குடிநீா் தேவைக்காக குடியிருப்புப் பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.