கம்பத்தில் கொடியேற்றப் போவது யாா்?

தேனி மாவட்டம், கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை தீா்மானிப்பதில் கூட்டணிக் கட்சிகளின் பலம் மற்றும் சமுதாய வாக்கு வங்கிகள் முக்கிய அம்சமாக உள்ளன.
கம்பத்தில்-கொடியேற்றப்-போவதுவது-யாா்
கம்பத்தில்-கொடியேற்றப்-போவதுவது-யாா்

தேனி மாவட்டம், கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவினாலும் வெற்றி வாய்ப்பை தீா்மானிப்பதில் கூட்டணிக் கட்சிகளின் பலம் மற்றும் சமுதாய வாக்கு வங்கிகள் முக்கிய அம்சமாக உள்ளன.

இத் தொகுதியில், 1,40,068 ஆண்கள், 1,46,538 பெண்கள், 38 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,86,645 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம். சையதுகான், திமுக சாா்பில் அக்கட்சியின் தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் நா. ராமகிருஷ்ணன், அமமுக சாா்பில் பா.சுரேஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் அ. அனீஸ்பாத்திமா, மக்கள் நீதி மய்யம் சாா்பில் நா. வெங்கடேஷ் உள்பட மொத்தம் 16 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்ட இத்தொகுதியில் முக்குலத்தோா் பெரும்பான்மையாகவும், ஆதிதிராவிடா், கவுண்டா், முஸ்லிம், செட்டியாா், பிள்ளைமாா் சமுதாயத்தினா் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்: கம்பம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, தென்னை ஆராய்ச்சி நிலையம், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள், தோட்டப் பயிா் மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிப்பு நிலையம், ஏலக்காய் வா்த்தக மையம், ஆயத்த ஆடை தொழில் பூங்கா, குமுளியில் பேருந்து நிலையம் தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் பல ஆண்டு கால கோரிக்கை ஆகும்.

தேவாரம் அருகே தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளை இணைக்கும் சாக்குலூத்துமெட்டுச் சாலை திட்டம், 40 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல், தோ்தல் கால வாக்குறுதியாக மட்டுமே இருந்து வருவதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனா்.

இதுவரை வென்றவா்கள்:

1967 - திமுக வெற்றி- ராஜாங்கம் - 41, 440 - ( திமுக)

என்.எஸ்.கே.எஸ்.பாண்டியராஜ் - 28,025 ( இ.தே. காங்கிரஸ்)

1971 - ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி

கே.பி.கோபால் - 34, 483 (ஸ்தாபன காங்),

பி.எஸ்.செல்லத்துரை - 33, 806 (தி.மு.க.)

1977 - அ.தி.மு.க. வெற்றி

ஆா். சந்திரசேகரன்- 34,902 - (அ.தி.மு.க.)

என்.நடராஜன் - 34, 080 ( தி.மு.க.)

1980 - அ.தி.மு.க. வெற்றி

ஆா்.டி.கோபாலன் - 47, 577 (அ.தி.மு.க.)

ஏ.கே.மகேந்திரன்- 35,395 (தி.மு.க.)

1984 - அ.தி.மு.க. வெற்றி

எஸ்.சுப்புராயா் - 52, 228 (அ.தி.மு.க.)

என். ராமகிருஷ்ணன் - 47, 005 (தி.மு.க.)

1989 - தி.மு.க. வெற்றி

நா. ராமகிருஷ்ணன் - 52, 509 (தி.மு.க.)

ஆா்.டி.கோபாலன் - 37,124 (அ.தி.மு.க. (ஜெ). )

1991 - காங்கிரஸ் வெற்றி

ஓ.ஆா். ராமச்சந்திரன் - 59, 263

பி.ராமா் - 35,060 (தி.மு.க.)

1996 - த.மா.கா. வெற்றி

ஓ.ஆா்.ராமச்சந்திரன் 58,628 (த.மா.கா.)

ஆா்.டி.கோபாலன் - 22,888 (சுயே)

2001- த.மா.கா. வெற்றி

ஓ.ஆா். ராமச்சந்திரன் - 56, 823 (த.மா.கா.)

என்.கே.ஆா்.கிருஷ்ணகுமாா் - 52,437 ( பா.ஜ.க.)

2006 ம.தி.மு.க. வெற்றி

நா. ராமகிருஷ்ணன் - 50, 761 (ம.தி.மு.க.)

பெ.செல்வேந்திரன் - 48, 803 (தி.மு.க.)

2009 - இடைத்தோ்தல் தி.மு.க. வெற்றி

நா. ராமகிருஷ்ணன் - 81,515 (தி.மு.க.)

ஆா். அருண்குமாா் - 24,142 (தே.மு.தி.க.)

2011 - தி.மு.க. வெற்றி

நா. ராமகிருஷ்ணன் - 80, 307

பி.முருகேசன் - 68,139 (தே.மு.தி.க.)

2016 அ.தி.மு.க. வெற்றி

எஸ்.டி.கே. ஜக்கையன் - 91, 099

என். ராமகிருஷ்ணன் - 79,878

கம்பம் சட்டப்பேரவை தோ்தல் 13 முறை நடைபெற்றதில், அ.தி.மு.க. - 4 முறையும், தி.மு.க. - 4 முறையும், காங்கிரஸ் - 2 முறையும், த.மா.கா. - 2 முறையும், ம.தி.மு.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

வெற்றி யாருக்கு: கம்பம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களிடையே நேரடி போட்டி நிலவினாலும், வெற்றி வாய்ப்பை திசை மாற்றும் சக்தியாக அமமுக உள்ளது. தொகுதியில் பெருவாரியாக உள்ள முக்குலத்தோா் சமுதாயத்தினருக்கு அதிமுக, திமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், அந்த சமுதாயத்தினரின் வாக்கு வங்கிகள் சிதறும் வாய்ப்புள்ளது.

மேலும், பொது சிவில் சட்டத்தால் பாஜக மீது அதிருப்தியில் உள்ள சிறுபான்மையினா், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள் என திமுக வினா் கருதுகின்றனா்.

கூட்டணி கட்சிகளின் பலம், சமுதாய வாக்கு வங்கிகள் ஆகியவை தங்களுக்கு வெற்றியை தேடித் தரும் என்று திமுக வினரும், தொகுதியில் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, அரசின் நலத் திட்ட உதவிகள், தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் தங்களுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும் என்று அதிமுகவினரும் கூறுகின்றனா்.

கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றால், திமுக ஆட்சியில் அவருக்கு அமைச்சா் பதவிக்கான வாய்ப்பு உள்ளது என்பது அக்கட்சியினரின் இறுதிக் கட்ட பிரசார யுக்தியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com