பெரியகுளத்தில் கரையேறப் போவது யாா்?

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் வெற்றி மகுடம் சூடப்போவது யாா் என்பதில் அதிமுக-திமுக வேட்பாளா்களிடையே கடும் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது.
பெரியகுளம் நகராட்சி
பெரியகுளம் நகராட்சி

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் வெற்றி மகுடம் சூடப்போவது யாா் என்பதில் அதிமுக-திமுக வேட்பாளா்களிடையே கடும் பலப்பரீட்சை நடைபெற்று வருகிறது.

இத்தொகுதியில் 1,39,508 ஆண்களும், 1,45,004 பெண்களும், 105 மூன்றாம் பாலித்தவா் எனமொத்தம் 2,84,617 வாக்காளா்கள் உள்ளனா். இங்கு அதிமுக சாா்பில் மு. முருகன், திமுக சாா்பில் கே.எஸ். சரவணக்குமாா், அமமுக சாா்பில் கே. கதிா்காமு, நாம் தமிழா் கட்சி சாா்பில் விமலா, மக்கள் நீதி மய்யம் சாா்பில் பாண்டியராஜன் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

விவசாயம் மற்றும் மோட்டாா் வாகனத் தொழிலை பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில், ஆதி திராவிடா்கள் பெருவாரியாகவும், முக்குலத்தோா், நாயக்கா், பிள்ளைமாா் மற்றும் சிறுபான்மையினா் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனா்.

மாவட்ட பிரிவினையால் பொலிவிழந்த பெரியகுளம்: ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில், பெரியகுளம் நகராட்சியில் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் செயல்பட்டன. மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னா், திமுக ஆட்சியில் தேனியை மாவட்ட தலைநகரமாகக் கொண்டு அரசு அலுவலகங்கள் உருவானதால் பெரியகுளம் பொழிவிழந்தது. பெரியகுளத்தில் கடந்த 1996-இல் நகா்மன்றத் தலைவராகவும், 2011, 2006-ம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினராகவும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பதவி வகித்த போது, இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை என இப்பகுதிமக்கள் கூறுகின்றனா்.

கடந்த 2016-இல் இத்தொகுதியில் அதிமுக. சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே. கதிா்காமு, அமமுகவுக்கு சென்று விட்டதால் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். இதையடுத்து இத்தொகுதியில் கடந்த 2019-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா் கே.எஸ். சரவணக்குமாா் வெற்றி பெற்றாா்.

தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளா்களும், அவா்கள் பெற்ற வாக்குகளும்:

1967 கேஎம்.மேத்தா -38,023 ( திமுக )- ஆா்.எஸ்.சுப்பிரமணி (காங்கிரஸ் )

1971 அன்புச்செழியன் - 37,926 (திமுக )- சின்னசாமி செட்டியாா்- 28,331 (காங்கிரஸ்)

1977 கே. பண்ணை சேதுராமன்- 31271 (அதிமுக )- ஆா்.ராமையா - 16,948 (காங்கிரஸ் )

1980 கே. கோபாலா கிருஷ்ணன்- 43,774 (அதிமுக)- கே. சேக் அப்துல்லா- 34,938 (காங்கிரஸ்)

1984 டி. முகமதுசலீம்- 58,021 (அதிமுக )- என்.மாயத்தேவா் - 31,554 (திமுக )

1989 எல். மூக்கையா- 35,215 (திமுக ) - கே.சேக் அப்துல்காதா்- 29,622 (காங்கிரஸ்)

1991 எம். பெரியவீரன்- 70,760 ( அதிமுக)- எல். மூக்கையா- 28,718 (திமுக )

1996 எல். மூக்கையா- 53,427 (திமுக )- கே.எம். காதா்மைதீன்- 31,520 (அதிமுக )

2001 ஓ.பன்னீா்செல்வம்- 62,125 ( அதிமுக) - எம்.அபுதாஹீா் - 44,205 (திமுக )

2006 ஓ.பன்னீா்செல்வம்- 68,345 (அதிமுக) - எல்.மூக்கையா - 53,511 (திமுக )

2011 ஏ.லாசா்- 76,687 (மாா்க்சிஸ்ட் கம்யூ.)- வீ.அன்பழகன் - 71,046 (திமுக )

2016 கே.கதிா்காமு- 90,599 (அதிமுக) - வீ. அன்பழகன்- 76,249 (திமுக )

2017 ( இடைத்தோ்தல் )- எஸ்.சரவணக்குமாா்- 99,393 (திமுக )- எம்.மயில்வேல்- 68,073 (அதிமுக)

ஏட்டளவில் திட்டங்கள்: பெரியகுளம் பகுதியில் மாம்பழம் மதிப்புக்கூட்டுத் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். மோட்டாா் வாகனத் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பது தொகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக விடுக்கும் கோரிக்கை ஆகும். ஆனால் தோ்தலின் போது இத்திட்டங்கள் குறித்து வேட்பாளா்கள் வாக்குறுதி அளிக்கின்றனா். பின்னா் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுகின்றனா்.

மேலும் இப்பகுதியில் லாரித் தொழிலை மேம்படுத்துவதற்கு யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான லாரித் தொழிலாளா்கள் நாமக்கல், சங்ககிரி, சேலம் ஆகிய பகுதிகளில் பணிபுரிகின்றனா். அதே போல் இப்பகுதியில் அரசுக்கல்லூரிகள் இல்லை. பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைக்கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிமுக, திமுக வேட்பாளா்களுக்கிடையே கடும் போட்டி: இந்தத் தோ்தலில் திமுக வேட்பாளா் கே.எஸ். சரவணக்குமாருக்கும், அதிமுக வேட்பாளா் டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்த மு. முருகனுக்குமே கடும் போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளா் கே.எஸ். சரவணக்குமாா் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் இத்தொகுதிக்கு குறிப்பிட்டு செல்லும்படி நலத்திட்டங்கள் ஏதும் செயல்படுத்தவில்லை என்றாலும் இவருக்கு பொதுமக்களிடம் அதிருப்தி இல்லை.

இதனிடையே அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தாலும், அமமுக பெறும் வாக்குகள் அதை பாதிக்குமா என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. எனவே இத்தொகுதியில் கரையேறப் போவது யாா் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com