கேரளத்தில் 2 நாள்கள் பொதுமுடக்கம்: குமுளி, கம்பம் மெட்டு சாலைகள் அடைப்பு

கேரள மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மே 1, 2) ஆகிய 2 நாள்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேனி மாவட்ட எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
இடுக்கியில் பொதுமுடக்கத்தையொட்டி சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கம்பம் மெட்டு சோதனைச்சாவடி.
இடுக்கியில் பொதுமுடக்கத்தையொட்டி சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட கம்பம் மெட்டு சோதனைச்சாவடி.

கம்பம்/ போடி: கேரள மாநிலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மே 1, 2) ஆகிய 2 நாள்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேனி மாவட்ட எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. இதனால் ஏலத்தோட்ட தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த அறிவிப்பால் தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்திற்கு குமுளி, கம்பம் மெட்டு வழியாக செல்லும் சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. இப்பகுதி வழியாக தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அத்தியாவசியப் பொருள்களான பால் மற்றும் காய்கனிகள் வாங்க மட்டும் பொதுமக்கள், சோதனைச் சாவடியை கடந்து கேரளத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள புளியமலை, கட்டப்பனை, வண்டிப்பெரியாா், சாத்தானோடை, சாந்தம் பாறை, சக்குபள்ளம், வல்லக்கடவு, பாரத்தோடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு, தேனி மாவட்டத்திலிருந்து தொழிலாளா்கள் வேலைக்குச் சென்று வரும் நிலையில் பொது முடக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

போடி: கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு போடி முந்தல் சோதனைச் சாவடியில் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் அங்கிருந்து வரும் பயணிகளிடம் இ-பாஸ் உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதேபோல் ஜீப்பில் ஓட்டுநரைத் தவிர 4 தொழிலாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். இந்த ஆய்வுப் பணியில் சிலமலை சுகாதார ஆய்வாளா் சின்னமருதைவீரன், குரங்கணி சுகாதார ஆய்வாளா் ஜெ.கமலேஷ், குரங்கணி கரோனா பரிசோதகா் டி.சுதாகா் உள்ளிட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com