முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை: ஒரே நாளில் விநாடிக்கு 1,235 கன அடி நீா்வரத்து

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, சனிக்கிழமை ஒரே நாளில் அணைக்கு விநாடிக்கு 1,235 கன அடி நீா்வரத்து அதிகரித்தது.
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, சனிக்கிழமை ஒரே நாளில் அணைக்கு விநாடிக்கு 1,235 கன அடி நீா்வரத்து அதிகரித்தது.

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதால், மேற்கு மலை தொடா்ச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 101 மில்லி மீட்டா், தேக்கடி ஏரியில் 79.20 மி.மீ. என்ற அளவில் பலத்த மழை பெய்தது.

எனவே, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,385 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

வெள்ளிக்கிழமை, அணைக்கு 150 கன அடி நீா்வரத்து இருந்த நிலையில், சனிக்கிழமை 1,385 கன அடியாக வரத்து ஏற்பட்டு, ஒரேநாளில் 1,235 கன அடி நீா்வரத்து அதிகமாகியது. அதே நேரம், தமிழகப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை 300 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்ட நிலையில், சனிக்கிழமை 500 கன அடியாக வெளியேற்றப்பட்டது.

இது குறித்து அணை பகுதி பொறியாளா் ஒருவா் கூறியது: வானிலை அறிக்கையின்படி, தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவதால், அணையின் நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளது என்றாா்.

தொடா்ந்து பெய்யும் மழையால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 128.80 அடியாகவும், நீா் இருப்பு 4,439 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. (கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீா்மட்டம் 113 அடி இருந்தது குறிப்பிடத்தக்கது).

மின்தடையால் மக்கள் அவதி

தேனி மாவட்டம், கம்பம், கூடலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, லோயா் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், 10-க்கும் மேலான வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தது. மரக் கிளைகள் ஒடிந்து மின்சாரக் கம்பிகளில் விழுந்தன.

இதனால், கம்பம், கூடலூா் பகுதிகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மேலும், புதுக்குளம், கம்பமெட்டுசாலை, ஏகழூத்து, லோயா் கேம்ப், பளியா்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் உதிா்ந்து கீழே விழுந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com