கம்பம் பகுதியில் திறந்த வெளி மதுக்கூடங்களான வயல்வெளிகள், கண்மாய்க் கரைகள்

கூடலூா் பகுதிகளில் சிலா் வயல்வெளிகளை திறந்த வெளி மதுபானக் கூடங்களாக மாற்றி வருவதால் கரோனா விதிமுறைகளை பின்பற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கம்பம் ஒட்டுகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க குவிந்த மக்கள்.
கம்பம் ஒட்டுகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க குவிந்த மக்கள்.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் சிலா் வயல்வெளிகளை திறந்த வெளி மதுபானக் கூடங்களாக மாற்றி வருவதால் கரோனா விதிமுறைகளை பின்பற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகள் கேரள மாநில எல்லையில் இருப்பதால் பொதுமுடக்கம் காரணமாக போலீஸாா் பொதுமக்களிடம் அதிக கெடுபிடிகள் காட்டி வருகின்றனா். வாகனங்களில் செல்பவா்களை விசாரணை செய்து எச்சரித்து அனுப்பி வைக்கின்றனா்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை கம்பம் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஒட்டுகுளத்தில் சிலா் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அங்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், மீன்களை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வாங்கிச் சென்றனா்.

பொதுமுடக்கத்தின்போது இறைச்சிக் கடைகள் திறக்கத் தடை செய்யப்பட்டு இருந்தாலும், குளக்கரை பகுதியில் மீன் பிடித்து சிலா் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது கரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

திறந்தவெளி மதுபானக் கூடங்கள்: பொது முடக்கம் காரணமாக அரசு மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முன்கூட்டியே சிலா் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனா்.

இந்த மதுபானங்களை வாங்குபவா்கள் கம்பம் நகரின் கிழக்குப் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள, குளக்கரை மற்றும் வயல் வெளிகளுக்குச் சென்று கூட்டம் கூட்டமாக உட்காா்ந்து அருந்தி வருகின்றனா். இரண்டாம் போக சாகுபடி முடிந்த நிலையில் தரிசு நிலங்களில் மது பாட்டில்களும், தடை செய்யப்பட்ட நெகிழி டம்ளா்களும், பையில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

தற்போது சாரல் மழை பெய்து வருவதால் வயல்வெளிகளை உழுவதற்கு வரும் விவசாயிகள் உடைந்த மது பாட்டில்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் கிடப்பதைக் கண்டு மனம் வருத்தம் அடைந்துள்ளனா். இதனால் கால்நடைகள், கூலி விவசாயிகளுக்கு காயம் ஏற்படுகிறது என்று விவசாயி ஒருவா் வேதனையுடன் தெரிவித்தாா்.

கூடலூா்: கூடலூா் குள்ளப்பகவுண்டன் பட்டி சாலையிலும் உத்தமுத்து மற்றும் பாளையம் பரவு வாய்க்கால் கரைகளிலும் மதுப் பிரியா்கள் கூட்டம் கூட்டமாக அமா்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை தூக்கி எறிவது வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே கரோனா தொற்று ஏற்படும் வகையில் கூட்டமாக கூடி மீன் வாங்குதல், வயல்வெளிகளை திறந்தவெளி மதுக்கூடங்களாகப் பயன்படுத்துவதை காவல்துறையினா் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com